தனியார் பள்ளிக்கு நிகராக வசதிகள் கொண்ட கெரிகேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி - கூடுதலாக ஆசிரியர் பணியிடம், வகுப்பறை ஏற்படுத்த கோரிக்கை :

By எஸ்.கே.ரமேஷ்

கரோனா கால விடுமுறையில் தனியார் பங்களிப்புடன் ரூ.5.43 லட்சம் மதிப்பில் கெரிகேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதி மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப் பள்ளியைச் சுற்றி நாடார் தெரு, புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கடந்த 1962-ம் ஆண்டு கெரிகேப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் 28-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 180-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு இப்பள்ளியை மேம்படுத்த ஆசிரியர்கள் மேற்கொண்ட திட்டங்கள் முக்கிய காரணமாகும். குறிப்பாக கரோனா கால விடுமுறையில், இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தனியார் பங்களிப்புடன் பள்ளியின் தலைமையாசிரியர் வீரமணி மேற்கொண்டார்.

பள்ளியில் ஸ்மார்ட் வகுப் பறைகள், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணி நடைபெற வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ரூ.5.43 லட்சம் மதிப்பில் உதவிகள் பெற்று பள்ளிக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிக்கு இணையான செயல்பாடுகளால், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், இதனை தக்க வைக்க பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன் வைக்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளியில் வசதிகள் உள்ளதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை காரணத்தினால் கூடுதலாக 3 வகுப்பறை கட்டிடம், கழிப்பறைகள் உள்ளிட்டவை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்திற்கு ரேம்ப் வசதி ஏற்படுத்த வேண்டும். தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் மாணவர் களின் எண்ணிக்கை 180 ஆகவும் உள்ளது.

மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதலாக ஆசிரியர்கள் பணியிடங்கள் உரு வாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தொடர்புடைய அலுவலர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்