தமிழக மீனவர்கள் பிரச்சினையில் - மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது : மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு நேற்று வந்தார். அவருக்கு கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

புதுக்கோட்டை திமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்த எம்.எம்.அப்துல்லா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இப்பிரச்சினைக்கு மாநிலங்களவையில் அழுத்தமாக குரலெழுப்புவேன்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள், கரோனா பரவல் காரணமாக விசா முடிந்தும் ஊர் திரும்ப முடியவில்லை.

அதேபோன்று, நாடு திரும்பியவர்கள் மீண்டும் செல்ல முடியாமல் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE