பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 9 ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோருக்கு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ப.வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர், செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்களை பாராட்டி விருதுகளை வழங்கி அமைச்சர் சிவசங்கர் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேனூர், சிறுவயலூர், தெரணி, பிலிமிசை, இரூர், கூத்தூர், கொளக்காநத்தம், அல்லிநகரம் மற்றும் இலந்தைக்குழி ஆகிய 9 ஊராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் இதர ஊராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியான 6,137 கர்ப்பிணிகள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4,617 பாலூட்டும் தாய்மார்களில் 3,768 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் பாரதிதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago