திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று விருதுகளை வழங்குகிறார்.
மறைந்த குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்.5-ம் தேதி (இன்று) ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
இதன்படி, தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரில், மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இந்த விருதுடன், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்.
நடப்பாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.பஞ்சநாதன், கொமக்கம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் மு.பன்னீர்செல்வம், உளுந்தை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செ.சாந்தி, கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைஆசிரியர் எஸ்.முகுந்தய்யா, வெண்மணம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சி.பாண்டியன்,
பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சே.பு.ஆனந்தன், ஆவடி நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ச.கலையரசி, பட்டரைபெரும்புதூர் டிஇஎல்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.நிஷ்கலா, ஜனப்பன் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை மஹிமா பொன்மலர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஜி.கோகிலா,
பூந்தமல்லி ஒன்றியம், புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை அ.சாந்தி, ஒண்டிக்குப்பம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் இரா.கோபிநாத், அம்பத்தூர் டி.ஐ.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை லதா ஜெயராஜன் ஆகிய 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இன்று நடைபெறும் விழாவில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வழங்குகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago