வேப்பம்பட்டு கிராமம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், 89 வேப்பம்பட்டு கிராமம் வழியாக சென்னை- திருத்தணி நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. இச்சாலை டன்லப் நகர் அருகே ‘எஸ்’ வடிவில் வளைந்து செல்கிறது. இந்தச் சாலையை ஒட்டி இருபுறமும் ஆறு குடியிருப்பு சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில் இருந்து வாகனங்கள், பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சாலையில் இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
இதனால், சுமார் 50 சதவீத விபத்துகள் குறைந்தன. எனினும், விபத்துகள் முழுமையாக குறையவில்லை. எனவே, இந்த ‘எஸ்’ வடிவ சாலையில் உள்ள இரண்டு வேகத்தடைகளுக்கு இடையே மேலும் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும். இதன் மூலம், நூறு சதவீத விபத்தைத் தடுக்க முடியும். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago