காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாநோய் தொற்றை கட்டுப்படுத்தவும், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவதைத் தவிர்க்கவும், மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த, தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் செப். 15-ம் தேதி மாலை 6 மணிவரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி வரை மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தக் கூடாது.
இல்லங்களில் கொண்டாடலாம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவி கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது. பொது மக்கள் தங்கள் இல்லங்களில் இந்த விழாவைக் கொண்டாடலாம்.விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனிநபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்படும்.
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும். அமைப்புகள் இச்செயல்களில் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது. தனிநபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோயில்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்லலாம். இவற்றை முறைப்படி அகற்ற இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கும். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மரியன்னையின் பிறந்த நாள் விழாவுக்காக பொது இடங்களில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் இந்த நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்டத்தை கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற போதிய ஒத்துழைப்பை நல்கலாம்என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago