திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி - கல்வெட்டு குறித்த அரசின் அறிவிப்பு தொல்லியல் ஆய்வாளர்கள் வரவேற்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ம் ஆண்டு மேலப்பனையூர் ஆசிரியரும், கல்வெட்டு ஆய்வாளருமான கரு.ராஜேந்திரன் கண்டறிந்தார். இயற்கையிலேயே எளிதாக சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை பொறித்துள்ளனர். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து சேதமடைந்து வந்தது.

இக் கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்த தொல்லியல்துறை மானியக் கோரிக்கையில் பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உட்பட தமிழகத்தில் 5 கல்வெட்டுகள் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமைச்சருக்கும், அரசுக்கும் தொல்லியல் ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்