பருவம் தவறி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சையப்பன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நன்கு மழை பெய்துள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயிர் தேர்வு செய்து பயிரிடுவது முக்கியம். தண்ணீர் அதிகம் உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட விரும்புவதால், அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் இந்த பருவத்திற்கேற்ப நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
இம்மாதம் நெல் நாற்று விட்டு நடவு செய்யும்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொடர் மழை பெய்வதால் பூ பூக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், நெல் மணியாகாமல் பதர் ஆகி மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட விற்பனையாளர்கள் காரணம் ஆகிவிடுவீர்கள். எனவே, விவசாயிகள் தங்கள் பகுதி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி, இப்பருவத்திற்கேற்ப பயிர் மற்றும் ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.
மேலும், தனியார் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள பருவம் அல்லாத விதைகளை (தமிழ்நாடு மற்றும் பிற மாநில நெல் விதைகள்) கண்டிப்பாக திரும்ப உற்பத்தியாளர்களுக்கு அனுப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் விதை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago