ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து, வெளியேற்றப்பட்ட உபரிநீர், நேற்று முன்தினம் நள்ளிரவில் பூண்டி ஏரியை வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணை நிரம்பியதால், 2-வது முறையாக, கடந்த 1-ம் தேதி இரவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. விநாடிக்கு ஆயிரம் கன அடி என, 1-ம் தேதி இரவு முதல், மறுநாள் அதிகாலை வரை, 7 மணி நேரம் வெளியேற்றப்பட்ட உபரிநீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு கடந்த 1-ம் தேதி நள்ளிரவு வந்தடைந்தது.
பள்ளிப்பட்டு வட்டம் - நெடியம், சாமந்தவாடா தரைப்பாலங்களை மூழ்கடித்த கிருஷ்ணாபுரம் அணையின் உபரிநீர், ஆந்திர மாநிலம் - நகரி, திருவள்ளூர் மாவட்டம் - நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, அருங்குளம் உள்ளிட்ட பகுதிகளைk கடந்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் பூண்டி ஏரியை வந்தடைந்தது. அந்நீர்,நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடி என, வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கிருஷ்ணா நீர் வரத்தால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, நேற்று காலை நிலவரப்படி 2,568 மில்லியன் கன அடியாக உள்ளது. அது, கிருஷ்ணாபுரம் அணையின் உபரிநீர் வருகையால், படிப்படியாக அதிகரிக்கும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago