நீட் தேர்வுக்கு எதிராக உயிர் நீத்த மாணவி அனிதாவின் 4-ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் திருவாரூர் திருவிக கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைத் தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். கல்லூரி கிளைத் தலைவர் அபிமன்யு மற்றும் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஹரிசுர்ஜித் பேசியது: ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அதிமுக அரசு சென்ற பாதையிலேயே திமுக அரசும் செல்வது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் தங்களின் உரிமைக்காக போராடிய மாணவர் சங்கத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். 2017-18-ம் ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மடிக்கணினிகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago