தூத்துக்குடி அருகே தனியார் சிமென்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு - மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே தனியார் சிமென்ட் தொழிற்சாலை அமைக்கஎதிர்ப்பு தெரிவித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள எஸ்.கைலாசபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் சிமென்ட்தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.கைலாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம், எஸ்.புதூர், வரதராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தமக்கள் நேற்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்கு வழக்கறிஞர்கள் சந்தனசேகர், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

பின்னர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு விவரம்:

எஸ்.கைலாசபுரம் பகுதியில் புதிதாக சிமென்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு தனியார் நிறுவனத்தினர் துரித கதியில் பணிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அக்கூட்டத்தில் வெளியூர் நபர்களை பங்கேற்கச் செய்து சிமென்ட் தொழிற்சாலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கருத்து கேட்பு கூட்டத்தை நிறைவு செய்துவிட்டனர். கைலாசபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தகிராம மக்கள் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் என்பதால் இப்பகுதியில் சிமென்ட் தொழிற்சாலை அமைவதை விரும்பவில்லை‌‌.

ஆலை பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

புதிதாக அமைய உள்ள இந்த சிமென்ட் தொழிற்சாலையால் இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் காய் காய்ப்பது குறைந்துபோகும்.

மேலும், சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசுகள் இலைகள் மீது படியும். அதனை உண்டு வாழும் கால்நடைகள் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு வயிற்று உபாதைகள், நுரையீரல் பிரச்சினைகள் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மிக அருகிலேயே மருத்துவமனை, பள்ளி ஆகியவை செயல்படுவதால் மாணவர்களுக்கும் சுகாதார கேடு ஏற்படுத்தும்.

இந்த ஆலையால் நிலம்,காற்று, நிலத்தடி நீர் மாசுபடும்.எனவே, இந்த ஆலைக்கு உரிமம் வழங்குவதை தடை செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்