பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் - மூன்றாம் பாலினத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து, பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் மூன்றாம் பாலினத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர் பேருந்துநிலையங்களிலும், ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர்.

இதில், மூன்றாம் பாலினத்தவர் கள் போல சிலர் வேடம் அணிந்து போலியாக சுற்றுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பேருந்துகள், ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் பணம் கேட்டு சிலர் தொந்தரவு செய்வதாகவும், பணம் கொடுக்க விரும்பாத பயணிகளை அவதூறாக பேசி அவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள் வதாகவும் தகவல் வந்துள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் சுயதொழில் செய்ய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மாவட்ட தொழில் மையம், வங்கிகள் மூலம் சுய தொழில் தொடங்க கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பித்து தொழில் தொடங்க கடனுதவி பெற்று சுயமாக சம்பாதித்து சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ பல வழிகள் உள்ளன.

இது போன்ற முன்னேற்ற பாதையில் செல்ல மூன்றாம் பாலினத்தவர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களை போல வேடமிடும் சில சமூக விரோதிகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வது வாடிக்கையாகி வருகிறது. எனவே, பயணிகளை தொந்தரவு செய்து பணம் பறிக்கும் போலிகளை கண்காணிக்க சீருடை அணியாத காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அடுத்த 2 நாட்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் அனைத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டமூன்றாம் பாலினத்தவர்கள், உண்மையான மூன்றாம் பாலினத்தவர்கள் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடுவதில்லை, எங்களை போல போலியாக சுற்றுபவர்கள் கண்டறிந்தால் உடனடியாக நாங்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்போம் எனக் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்