மருத்துவர்கள் குறைந்த செலவில் - நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆராய வேண்டும் : வேலம்மாள் கல்வி குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மருத்துவர்கள் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பது எப்படி என ஆராய வேண்டும் என வேலம்மாள் கல்வி குழும தலைவர் எம்.வி.முத்து ராமலிங்கம் தெரிவித்தார்.

வேலூர் நறுவீ மருத்துவமனை யில் ‘மருத்துவ சேவையில் ஒழுக்க நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் வரவேற்றார். வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும் போது ‘‘நாம் எதை செய்தாலும் அதில் ஒழுக்கம், கடமை உணர்வு, நேரம் தவறாமை உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் தான் வெற்றியை காண முடியும்.

கடந்த 1986-ல் சென்னை முகப்பேரில் 183 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட எங்கள் பள்ளியில்,நாங்கள் காட்டிய ஒழுக்கம், நேர்மை, கடமை, நேரம் தவறாமை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் இன்று பள்ளி, மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என 1.25 லட்சம் மாணவர்கள் படிக்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

நறுவீ மருத்துவமனை கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது வியப்பாக இருக்கிறது. விரைவில் நானும் மருத்துவமனை ஒன்றை நிறுவ உள்ளேன். மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளை காப்பாற்றி அனுப்ப வேண்டும். நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ பரிசோதனையை மட்டும் செய்வதுடன் மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் அவர்களுக்கு ஏற்படும் செலவை குறைத்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். மருத்துவமனை என்றாலே பணம் கொடுக்கும் இடம் என்ற நிலை மாற வேண்டும்.

நோயாளி சிகிச்சையில் உயிரிழந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பது எப்படி என்பதை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து அதை மேம்படுத்த வேண்டும். பணத்துக்காக சிகிச்சை அளிப்பதில் காலம் தாழ்த் தக்கூடாது. ஒரு நோயாளியிடம் இருந்து பணம் சம்பாதிப்பதை விட 4 பேரிடம் இருந்து சம்பாதிக்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவ மனை மருத்துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், பொது மேலாளர் நிதின் சம்பத், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், மருத்துவ மனை செயல் இயக்குநர் பால் ஹென்றி நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்