உடுமலை அருகே யானை தந்தம் கடத்தல் - வன கிராமங்களில் தீவிர விசாரணை :

By செய்திப்பிரிவு

உடுமலை அருகே யானை தந்தம் கடத்தப்பட்டது தொடர்பாக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம் கரட்டுர் சடையம்பாறை சரக வனப் பகுதியில் கடந்த 28-ம் தேதி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒற்றை தந்த ஆண் யானை இறந்து கிடந்தது. இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர் கணேஷ், உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம், வனச்சரக அலுவலர் தனபால், வனவர், வனக் காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள், அரசு வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் கரட்டூர் கால்நடை மருத்துவர் அரவிந்த் அடங்கிய குழு சம்பவ இடத்தை தணிக்கை செய்தனர். அப்போது இறந்த யானையின் ஒற்றை தந்தம் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 30-ம் தேதிபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானையின் தந்தமானது யானையின் இறப்புக்கு பின் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக வனத்துறையினர், மலைவாழ் கிராமங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மலைக் கிராமங்களில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வெளியாட்கள் காடுகளுக்குள் அதிகளவில் சென்றுவருவதால், தீவிர விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு பக்கம், வனத்துறையில் பயிற்சி பெற்ற மோப்ப நாயும், மலைவாழ் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, துப்பறியும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். குழிப்பட்டி உட்பட பல்வேறுமலைவாழ் கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். சமீபத்தில் தந்தம் கடத்தல் தொடர்பாக எவ்வித வழக்கும் இல்லாத நிலையில், துப்பறியும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்