பனியன் துணிகளை பெற்று பணம் தராமல் - ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது :

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகளை பெற்று கொண்டு, அதற்குரிய தொகையைக் கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவான நபரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் ஓடக்காடு பங்களா வீதியை சேர்ந்தவர் மயூர் அகர்வால் (45). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். 2019-ம் ஆண்டு இவருக்கு தொழில் நிமித்தமாக, சென்னையைச் சேர்ந்த அரவிந்த் வைஷ்ணவ் (40) என்பவர் அறிமுகமானார். இவர் மயூர் அகர்வாலிடம் பனியன் துணி ஆர்டர் கொடுத்தார். துணிகளை அவரும் சப்ளை செய்தார். ஒரு சிறிய தொகையை மட்டும் அரவிந்த் வைஷ்ணவ் செலுத்தி, மயூர் அகர்வாலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.

இதை நம்பிய மயூர் அகர்வால், தொடர்ந்து அவரிடம் ஆடை வர்த்தகம் மேற்கொண்டார். இதையடுத்து, புதிய ஆர்டர்களுக்கான பனியன் துணிகளை மயூர் அகர்வால், சப்ளை செய்தார். ஆனால் அதற்குரிய தொகையைத் தராமல் தொடர்ந்து காலம் கடத்தினார். இதையடுத்து, அரவிந்த் வைஷ்ணவ் ரூ. 58 லட்சத்து 2 ஆயிரத்து 586 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

திருப்பூரில் உள்ள பலரிடம், இதேபோல் பல லட்சம் ரூபாய்க்கு, பனியன் துணிகளைப் பெற்று, பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுகுறித்து மயூர் அகர்வால் அளித்த புகாரின் பேரில், அரவிந்த் வைஷ்ணவ் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த அரவிந்த் வைஷ்ணவை சென்னையில் வைத்து திருப்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE