பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசுதடை விதித்துள்ள நிலையில், உடனடியாக இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,தமிழகம் முழுவதும் கோயில்களில்இந்து முன்னணியினர் வழிபாடுநடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள குலாலர் விநாயகர் கோயில் முன்பு நடந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் பங்கேற்றார். இதில் இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள், அரசை கண்டித்து மண்ணை வாரித் துாற்றி சாபமிட்டனர். தொடர்ந்து அப்பகுதியிலேயே மறியல் போராட்டம் நடந்தது.இந்நிலையில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தியை தடைசெய்யும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதை இந்து மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக அரசுக்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று கோயில்களில் வழிபாடு நடத்தி இருக்கிறோம்.
வரும் 10-ம் தேதி திட்டமிட்டபடி, 1.25 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த உள்ளோம்.கடந்த முறை, 5 லட்சம் வீடுகளில்விநாயகர் சிலைகளை வைத்தனர்.இதைவிட, அதிகமாக வைத்து வழிபட திட்டமிட்டுள்ளோம். உடனடியாக, இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகரில் டவுன்ஹால், புஷ்பா திரையரங்க வளைவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியினர் கையில் விநாயகர் சிலைகளை வைத்தும், விநாயகர் வேடமணிந்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago