கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா (போஷன் மா) ‘வீட்டுக்கு வீடு ஊட்டச்சத்து விழா” நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:
வரும் 30-ம் தேதி வரை, தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடை பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். போஷான் அபியான் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி நிலையை மேம்படுத்துதல், ரத்த சோகையை குறைத்தல் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் வளர்ச்சி குறைபாடு மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த உள்ளூரில் கிடைக்கக் கூடிய உணவு காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள், சிறு தானியங்கள் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகள் அடங்கிய மாதாந்திர அட்டவணையை உருவாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தோட்டக்கலைத்துறை சார்பாக விவசாய குழுக்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் நாற்றுக்களை விநியோகம் செய்து சத்தான காய்கறிகளை விளைவிக்க வேண்டும். விதை பந்துகள் அளித்தல், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும். மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களது அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அலுவலர்களை கொண்டு இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, பிஆர்ஓ மோகன், புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago