ஈரோட்டில் நான்கு மாத இடைவெளிக்குப்பிறகு நேற்று கால்நடைச்சந்தை கூடிய நிலையில், மாடுகள் வரத்து மிகக்குறைவாக இருந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமையன்று கால்நடைச்சந்தை கூடுவது வழக்கம். ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், கறவைமாடு, எருமை, வளர்ப்புக்கன்று ஆகியவற்றை இங்கு விற்பனை செய்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள், இங்கு மாடுகளை வாங்கிச் செல்வார்கள். கரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 15-ம் தேதி முதல் கால்நடைச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்று குறைவால், கால்நடைச் சந்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நான்கரை மாதங்களுக்குப்பிறகு கருங்கல்பாளையத்தில் நேற்று கால்நடைச்சந்தை நடந்தது.
சந்தை தொடங்குவது குறித்து சரியான தகவல் தெரியாததால் குறைந்த எண்ணிக்கையிலேயே மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. நேற்றைய சந்தையில் 100 பசுக்கள், 30 எருமை மற்றும் 20 வளர்ப்புக்கன்றுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனையும் குறைவாகவே இருந்தது.
கரோனா சான்றிதழ் கட்டாயம்
சந்தைக்குள் வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்த வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் மட்டும் சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே போல், சந்தைக்கு வந்த மாடு களுக்கு நோய் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago