பரமக்குடியில் செப்.11-ல் அனுசரிக் கப்படும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக 144 தடையுத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி செப்.11-ல் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை.
பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேருக்கு மிகாமல், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியைப் பெற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்கள் செப்.7-க்குள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது collrrmd@tn.nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
முன் அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து செல்ல வேண்டும். வாடகை வாகனங்களில் வராமல் சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். திறந்தவெளி வாகனங்கள், வேன், டிராக்டர், டூவீலர்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை.
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி வரவோ, சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, முழக்கமிடவோ கூடாது.
அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றோர் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்துக்கு வந்து செல்வதுடன் வரும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
மேலும், ஒலிபெருக்கி வைத்தல், பட்டாசு வெடித்தல், சமுதாயக் கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் வேடமணிந்து வருதல், ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கவும் அனுமதி கிடையாது, என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago