பட்டுக்கோட்டையில் - ரூ.4,500 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் உள்ள தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்களாக பணியாற்றி வருபவர்கள் அருண், அந்தோனி யாகப்பா. இவர்கள் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதில், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்த லோடு ஆட்டோவை பதிவு செய்ய ரூ.2,500-ம், ஏற்கெனவே பதிவு செய்த இரு வாகனங்களின் ஆர்.சி புக் வாங்க ரூ.4,500-ம் லஞ்சமாக தர வேண்டும் என புரோக்கர் கார்த்திகேயன் மூலம், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆர்.கலைச்செல்வி(45) கேட்டதாகவும், லஞ்சம் தர விரும்பாததால் புகார் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, புரோக்கர் கார்த்திகேயனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.4,500 ரொக்கப் பணத்தை அருண், அந்தோனி யாகப்பா இருவரும் வழங்கினர்.

அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட கார்த்திகேயன், அதை கலைச்செல்வியிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து, கலைச்செல்வியை கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.4,500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கார்த்திகேயனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்