மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற - தூத்துக்குடியில் செப். 7 முதல் சிறப்பு முகாம்கள் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான மதிப்பீடு முகாம் வரும் 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

செப்டம்பர் 7-ம் தேதி தூத்துக்குடி மில்லர்புரம் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 8-ம் தேதி திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 9-ம் தேதி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 14-ம் தேதி ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 15-ம் தேதி சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 16-ம் தேதி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

கை மற்றும் கால்கள் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் வாக்கர், சிறப்பு குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, முட நீக்கு சாதனங்கள் மற்றும்செயற்கை அவயங்கள், கால்கள்,மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி உபகரணங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான தினசரி பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் செல்போன், பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் போன், பார்வையற்றோருக்கான நவீன அதிரும் மடக்கு குச்சி, காது கேளாத, வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன காது கருவி போன்றவை வழங்குவதற்கான பரிசோதனை மற்றும் தேர்வு இந்த முகாமில் நடைபெறும்.

மேலும், தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள், பயிற்சிகள், வேலைவாய்ப்பு, சிறப்பு பள்ளி சேர்க்கை, பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி, இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத பயனாளிகளுக்கு அடையாள அட்டை ஆகியவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, குடும்ப அட்டை மற்றும் அதன் நகல், ஆதார் அட்டை மற்றும் அதன் நகல், மத்திய அரசின் திட்டத்தில் உபகரணங்கள் தேவைப்படுவோர் தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நகல், வருமானச் சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்