விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப் பட்டு திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சீட்டும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகள் வேலூர் மாவட்டத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வேலூர் மாவட்டத்துடன் இருந்தபோது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நேற்று தொடங்கியது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற் கட்டமாக வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 350 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 850 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த காவல் துறை பாது காப்புடன் தனி வாகனத்தில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் உள்ள குறைபாடுகள், பழுது சரிபார்ப்பு, சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago