பள்ளி திறப்பு முன்னேற்பாடு: திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று (செப். 1) பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, நேற்று திருவள்ளூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு, 9, 10, 11,12 வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த வாரம் தீவிர தூய்மை வாரம் கடைபிடிக்கப்பட்டு, முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று திருவள்ளூர் ஆர்.எம்‌.ஜெயின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சதுரங்கப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சீத்தஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்துதான் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஒரு வகுப்பு அறையில் 20 மாணவர்கள் இருப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடைபெறும். 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும்.

மாவட்டத்தில் உள்ள உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) தர், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளுர் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்