காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.ஆர்த்தி வெளியிட்டார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தேவி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்த உள்ளன. ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,281 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெளியிட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார் பெற்றுக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களும், 359 கிராம ஊராட்சிகளும் உள்ளன. வாக்குப் பதிவுக்காக 2,034 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11,54,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 5,69,583, பெண் வாக்காளர்கள் 5,85,163, இதரர் 187. மொத்தம் 16,208 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எம்.ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய் துறையினரிடம் இருந்து பெறப்படும். உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்