திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சாலைகளையும் மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சாலை களும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராம சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு அங்கு கருப்பு, வெள்ளை நிற வண்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் சாலையோரங்களில் கிணறு, குளம், குட்டை இருந்தால் அங்கு தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், மலைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால் மலை கிராமங்களில் உள்ள சாலைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பாதையில் உள்ள வளைவுகளில் மின்விளக்கு பொருத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு சுவர் அமைக் கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.
இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பேசும்போது, ‘‘பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் கடந்த 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 5 கி.மீ., தொலைவுள்ள கிராம சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது. இதை 4 முதல் 3 கி.மீ., தொலைவுள்ள சாலைகளும் இத்திட்டத்தின் கீழ் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இத்திட்டம் வாயிலாக அமைக்கப்படும் கிராம சாலைகள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் வாய்ந்த சாலைகளாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், பொதுமக்கள் சிரமமின்றி எளிதாக சென்று வரும் அளவுக்கு பாதுகாப்பான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டத்துக்காக ஒதுக்கப் பட்ட நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் அரசிடம் பேசி போதிய நிதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கிராம சாலை பணி திட்டங்களை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் செல்வராசு, ஊராட்சி களின் உதவி இயக்குநர் அருண், உதவி திட்ட அலுவலர்கள் விஜய குமாரி, ரூபேஷ்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago