கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் தூய்மைப் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

பள்ளிகள் திறக்கப்படுவதால், திருப்பூர் மாநகரில் கரோனா சிகிச்சை மையங்களாக இருந்த பள்ளிகளில் படுக்கை மற்றும் கட்டில்களை அப்புறப்படுத்தி தூய்மைப் பணி நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதையொட்டி, அரசு பள்ளிகளை நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை (செப்.1) முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும், பள்ளிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், ஆங்காங்கே அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழநியம்மாள் மேல்நிலைப் பள்ளி, சிக்கண்ணா அரசு கல்லூரி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, குமரன் கல்லூரி ஆகிய இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், இந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரி திறப்பையொட்டி, அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று தொடங்கின.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "மேற்கண்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் 200 படுக்கைகள் தொடங்கி, பல நூறு பேர் தங்கி சிகிச்சைஎடுத்து வந்தனர். படுக்கைகள், கட்டில்உள்ளிட்ட உபகரணங்களை அகற்றி வருகிறோம். வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கரோனா மையத்திலும் சுத்தம் செய்து வருகிறோம். அங்குள்ள படுக்கை, கட்டில்கள் உள்ளிட்டவற்றை வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று வைக்க உள்ளோம்" என்றனர்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடப் பகுதியில் மேல் தளத்திலிருந்து கயிற்றால் கட்டில்களை கட்டி கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள். படம்: இரா.கார்த்திகேயன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்