பள்ளி, கல்லூரிகள் திறப்பை யொட்டி பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தொற்று குறைவானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்றின் வேகம் குறைந்த நிலையில், சிறப்பு சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அந்த மையங்களும் மூடப்பட்டு, நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சை மையங்களாக செயல் பட்ட பள்ளி, கல்லூரிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.
இதில், கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதிகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த 37 பேரில், 10 பேர் கோபி அரசு மருத்துவ மனைக்கும், 27 பேர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கும் இடம் மாற்றப்பட்டனர்.
இதேபோல் கோபி கலை அறிவியல் கல்லூரி மையத்தில் தங்கியிருந்த 49 கரோனா நோயாளிகளும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இனிவரும் கரோனா நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago