திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பயிலும் 890 பள்ளிகள் நாளை (செப்.1) முதல் செயல்படவுள்ளன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், செப்.1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பயிலும் 224 அரசுப் பள்ளிகள், 110 அரசு உதவி பெறும் பள்ளிகள், 140 மெட்ரிக் பள்ளிகள், 66 சிபிஎஸ்இ/ஐசிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 540 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதில், 9-ம் வகுப்பில் 40,153 பேரும், 10-ம் வகுப்பில் 39,676 பேரும், பிளஸ் 1 வகுப்பில் 35,639 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 36,090 பேரும் என மொத்தம் 1,51,558 பேர் பள்ளி செல்ல உள்ளனர். வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன. இதையடுத்து, கடந்த சில நாட்களாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் 350 பள்ளிகள் செயல்பட உள்ளன.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர். அதற்குரிய கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 25 மாணவர்களை மட்டும் அமர வைக்க வேண்டும். சமூக இடைவெளியை மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டும்.
மாவட்டத்தில், 112 அரசு உயர்நிலைப் பள்ளிகள் உட்பட 164 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 186 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 350 பள்ளிகளில் 9-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை நடைபெற உள்ளன.
இப்பள்ளிகளில், 61,589 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 89,805 மாணவ, மாணவிகள் வருகை தர உள்ளனர். இதில், மாவட்டத்தில் அதிக மாணவ, மாணவிகளைக் கொண்ட 40 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகளில் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடக்கும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் அவரவர் பணிகளை கவனிப்பர் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago