தூத்துக்குடியில் ரூ.5.64 கோடியில் கட்டப்பட்ட புதிய காவலர் குடியிருப்பு திறப்பு : காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 10-வது தெருவில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. 3 ஆய்வாளர் குடியிருப்புகள், 9 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள், 23 காவலர் குடியிருப்புகள் என, மொத்தம் 35 குடியிருப்புகளுடன் இந்த கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதமே கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 4 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இந்த குடியிருப்புகளில் வசிக்க காவல் துறையினர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 4 மாதங்களாக காத்திருந்தனர். இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த 21-ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், காவலர் குடியிருப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திறந்துவைத்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளநிலை உதவிபொறியாளர் சுசித்ரா, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே மானூரில் ரூ.5.5 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்பை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் குத்து விளக்கேற்றினார். தாழையூத்து டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் போலீஸார், ஒன்றிய திமுக நிர்வாகிகள் அன்பழகன், அருள்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குடியிருப்பில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 49 போலீஸாருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்