பக்தர்கள் வசதிக்காக நகரின் எல்லையில் இருந்து - திருச்செந்தூர் கோயிலுக்கு தனிச் சாலை : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூரில் பக்தர்கள் வசதிக்காக கோயிலுக்கு தனி சாலை அமைக்கப்படும் என, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்செந்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம், அரசு விருந்தினர் மாளிகை சாலையில் தற்போதுள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே ரூ.3.82 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பணிகளை தொடங்கிவைத்தார். தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் ரூ.29.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெளியூர்களில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வாகனத்தில் வரும் பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடி சாலையில் திருச்செந்தூர் நகரின் எல்லையில் இருந்து கோயிலுக்கு தனி சாலை அமைக்கப்பட உள்ளது.அதேபோல கோயிலில் இருந்து வெளியே செல்வதற்கு அமலிநகர், தோப்பூர் வழியாக தனி சாலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றார்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கடராமானுஜபுரம் ஊராட்சிகலியன்விளையில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி, பிறைகுடியிருப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் திறந்துவைத்தார். குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மத்தியசுற்றுலாத் துறையின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம், தகவல் மையம், பூங்கா, சிசிடிவி கேமரா போன்ற வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்