திருப்பூர் மாநகரில் 34 மையங்களில் நடைபெற்ற முகாம்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு சிரமமில்லாமல் தடுப்பூசிகளை முறையாக வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் திருப்பூர் மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், அடுத்தகட்ட கரோனா தொற்று பரவல் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் ஏற்படவாய்ப்புள்ளதாக அரசு அதிகாரிகள்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தடுப்பூசி மையங்களில் அதிகளவில் கூட்டமும் இருந்து வருகிறது. மக்களின் தேவைக்கேற்ப, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் கையிருப்பு அளவை பொறுத்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொய்வின்றி மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மாவட்டத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 34 முகாம்கள் மூலமாக, மையத்துக்கு தலா 650 தடுப்பூசிகள் வீதம் பொதுமக்களுக்கு தடுப்பூசிசெலுத்தப்பட்டது. காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை முகாம்கள் நடைபெற்றன. இதன்மூலமாக மாநகராட்சி பகுதிகள் முழுவதும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, தடுப்பூசி முகாம்களுக்கு நேற்று காலை மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலாவது மண்டலம் குமார் நகரிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அலுவலர்களுடன் பேசிய ஆணையர் கிராந்திகுார் பாடி, ‘தடுப்பூசி முகாம்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு தங்குதடையின்றி, சிரமமின்றி தடுப்பூசிகளை முறையாக அதிகாரிகள் வழங்க வேண்டும்' என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago