பாரிசில் நடந்த சர்வதேச செஸ் போட்டி - கிராண்ட் மாஸ்டர் ஈரோடு இனியன் சாம்பியன் :

By செய்திப்பிரிவு

பாரிசில் நடந்த நாசியல் சர்வதேச செஸ் போட்டிகளில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ‘நாசியல் சர்வதேச ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டிகள், ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்தது. இதில் 9 நாடுகளைச் சேர்ந்த 54 சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் பங்கேற்றார்.

9 சுற்றுகளாக நடந்த கிளாசிகல் பிரிவில், ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றும், 2 போட்டிகளில் சமன் செய்தும், 8 புள்ளிகளுடன் இனியன் முதல் இடம் பிடித்தார். உக்ரைன் வீரர் கிராண்ட் மாஸ்டர் யூரி ஸ்லோடோவ்நிச்சன்கோ இரண்டாவது இடமும், பிரான்ஸ் வீரர் காம்ராத் யான்னிக் மூன்றாவது இடமும் பெற்றனர்.

மேலும், கடந்த 24-ம் தேதி நடந்த, ‘நாசியல் சர்வதேச ஓபன் பிலிட்ஸ் 2021 (விரைவு)’ போட்டியில், 9 சுற்றுகளில், 7 சுற்றுகளில் பி.இனியன் வெற்றி பெற்றார். ஒரு ஆட்டத்தில் தோல்வியும், ஒரு ஆட்டத்தை சமன் செய்ததன் மூலம் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். கடந்த ஜனவரிக்குப் பின்னர் கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் இந்த போட்டியில்தான் முதன்முதலாக நேரடியாக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்