குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை கேட்டு - திருப்பத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல் : துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் தடையின்றி குடிநீர்மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி சார்பில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 9 மற்றும் 10 வார்டு பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் சரி வர வழங்கப்படுவ தில்லை என குற்றஞ்சாட்டிய அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரிய கடை தெருவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘நகராட்சிக்கு உட்பட்ட 9 மற்றும் 10-வது வார்டுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் வார்டில் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை. கழிவுநீர் கால்வாய் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்து வருவதால் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது.

சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலை ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வார்டில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் கட்டணத்தை நகராட்சி அதிகாரிகள் தவறாமல் வசூலிக்கின்றனர். ஆனால், தண்ணீரே வருவதில்லை, குடிநீர் கட்டணம் மட்டும் எதற்கு வசூல் செய்கிறீர்கள் என கேட்டால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என மிரட்டுகின்றனர்.

நகராட்சி அலுவலகத்துக்கு சென்று பல முறை மனு அளித்து விட்டோம். கடந்த 10 மாதங்களில் 3 ஆணையாளர்கள் மாறிவிட்டனர். எங்கள் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. எனவே, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம், நகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படும் என வாக்குறுதி யளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்