கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட - ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் வாகன சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களான ஹான்ஸ், மாவா, பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா போதைப் பொருட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வழியாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை வரை கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செங்கிலிகுப்பம் அருகே சாலையோரம் 2 கார்கள் நீண்ட நேரமாக நின்றிருப்பதை காவல் துறையினர் கண்டனர்.

உடனே, அந்த காரை நெருங்கிய போது காரில் இருந்த 2 பேர் கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்து காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 32 மூட்டைகளில் பான்பராக், மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்றதும், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை கண்டு செங்கிலிகுப்பம் அருகே சாலையோரம் காத்திருத்திருந்தாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (32), சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சித்திக்(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து குட்கா போதைப் பொருட்கள், 2 கார்களை பறிமுதல் செய்த கிராமிய காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப்பகுதியில் கிராமிய காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 12 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, வேனை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ஐயப்பன்(31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர்,அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்