திருத்தணி அருகே சுவர் இடிந்து விழுந்து - கூலித் தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கனகம்மா சத்திரம் அருகே சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கொடுவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 26-ம் தேதியன்று அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர், வேலு மற்றும் தேவராஜ் ஆகியோருடன் கனகம்மா சத்திரத்துக்கு கூலி வேலைக்குச் சென்றனர்.

அப்போது, கனகம்மா சத்திரம் பஜாரில் உள்ள புருஷோத்தமன் என்பவருக்குச் சொந்தமான பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து பலராமன் மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கனகம்மா சத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பலராமன் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, கனகம்மா சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்