மழை வந்தால் மட்டுமே தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரும் : நீர்வளம் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

கர்நாடக அரசு கட்டியுள்ள அணை மற்றும் நீர்பாசனம் திட்டங்களால் இனி தென்பெண்ணை ஆற்றில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும் என தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் கேஜிஎப் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள யார்கோள் அணையை, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நிர்வாகிகள் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது மாநிலத் தலைவர் கூறியதாவது:

யார்கோள் அணையை கர்நாடக அரசு கட்டியதால், தமிழக மக்களுக்கு பல லட்சம் ஹெக்டேர் நீர்வளம் பாதிக்கப் படும். விவசாயிகள் இது தொடர்பாக பல போராட்டம் நடத்தியும், தீர்வு காண முயற்சி செய்யாதது வருத்தமளிக்கின்றது.

தென்பெண்ணையாற்றில், ஒய்ட்பீல்டு அருகே எளமல்லப்பன் ஏரியிலிருந்து கர்நாடக அரசு, 3 ஆயிரம் எச்.பி., மின் மோட்டார் மூலம் தேசிய நெடுஞ்சாலையின் 20 அடி ஆழத்தில், 8 அடி விட்டமுள்ள சிமெண்ட் குழாய் அமைத்து, கே.ஜி.எப்., மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு, யார்கோள் அணைக்கும் குழாய் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.

இது மார்க்கண்டேய நதிக்கு மட்டும் இழப்பு அல்ல. மொத்த வட தமிழக மக்களுக்கும் பாதிப்பு ஆகும். இப்பிரச்னையை தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பது வருத்தமளிக்கின்றது. இனி மழை வந்தால் மட்டுமே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரும். இதற்கு தென்பெண்ணை ஆற்றில் சாக்கடை நீர் கலக்கின்றன என சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதும் காரணம் என கர்நாடக அரசு கூறுகிறது. ஆனால் ஆற்றிலிருந்து பல கி.மீ., தூரம் புதிய கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வின்போது மாவட்டச் செயலாளர் ராஜா, வேப்பனப்பள்ளி ஒன்றிய துணை செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்