தமிழகத்தில் மின் உற்பத்தியை முழுமையாக்கி, தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை நிறுத்தவேண்டும் என ஏஐசிசிடியு தமிழ்நாடு மின்வாரிய பொதுத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில முதல் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் சி.முருகன் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. ஏஐசிசிடியு மாநில பொதுச்செயலாளர் கே.ஜி.தேசிகன் தொடக்க உரையாற்றினார். அகில இந்திய தலைவர் வி.சங்கர் சிறப்புரையாற்றினார்.
ஏஐசிசிடியு டிஎன்இபி பொருளாளர் அய்யப்பன், ஏஐசிசிடியு சிறப்பு தலைவர் இரணியப்பன் கருத்துரை வழங்கினர். அகில இந்திய விவசாய சங்க மாநிலச் செயலாளர் ஏ.சந்திரசேகரன், தமிழ்நாடு ஜனநாயக போக்குவரத்து தொழிலாளர் சங்கச் செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலாளர் மு.ராமச்சந்திரன், ஏஐசிசிடியு டிஎன்இபி பொதுத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மா.பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மின்சார சட்ட திருத்த மசோதா, கார்ப்பரேட் ஆதரவு 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும். மின்வாரிய ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பஞ்சப்பட்டி, லீவு சரண்டர் தொகைகளை உடனே வழங்கவேண்டும். கேங்மேன் பயிற்சி காலத்தை 3 மாதங்களாக மாற்றி சொந்த ஊர்களுக்கு மாற்றம் செய்யவேண்டும். பொதுசேமநலநிதி, பயணப்படி போன்ற பணப்பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்கவேண்டும். மின் உற்பத்தியை முழுமையாக்கி, தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago