ஆலங்குடியில் புதிய அரசு கல்லூரி அறிவிப்பு - கூடுதலாக 500 மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக ஆண்டுக்கு 500 பேர் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் 2, அறந்தாங்கி, கறம்பக்குடியில் தலா 1 என 4 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள 1,240 இளநிலை படிப்புகளுக்கு 4,884 பேரும், புதுக்கோட்டை மன்னர் அரசு கலைக் கல்லூரியில் 1,000 இடங்களுக்கு 7,800 பேரும், அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரியில் 580 இடங்களுக்கு 2,621 பேரும், கறம்பக்குடி அரசு கலைக் கல்லூரியில் 380 இடங்களுக்கு 1,000-க்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். தற்போது மாணவ, மாணவிகளின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆலங்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன் கூறியபோது, “மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பிரிவுகளில் உள்ள இடங்களைவிட 2 மடங்கு மாணவ, மாணவிகள் கூடுதலாக விண்ணப்பிக்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் பாதிபேருக்கு மட்டுமே இக்கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கிறது. ஆலங்குடியில் புதிய கல்லூரி அமைப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் கல்லூரியின் மூலம் கூடுதலாக 500 பேர் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்’’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, “ஆலங்குடி வட்டத்தில் கீழாத்தூர் பகுதியில் புதிய கல்லூரி அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதை, தமிழக அரசு முடிவு செய்யும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE