‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என மோசடி - தூத்துக்குடியில் 3 இளைஞர்கள் கைது :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், முகநூலில் ‘‘கிங் ஸ்டார் பிரைவேட்” என்ற பெயரில் வந்த ‘அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை’ என்ற விளம்பரத்தை பார்த்து, கடந்த 14.07.2021-ல் தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்துக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றுள்ளார்.

அப்போது முதலில் ரூ.8 ஆயிரம் கட்டினால் அரசு அங்கீகாரம் பெற்றவேலைக்கான உத்தரவு கிடைக்கும். வாரந்தோறும் ரூ.2,500-ம்,போனஸ் தொகையும் கிடைக்கும்என்று நிறுவனத்தினர் கூறியுள்ளனர். அந்தப் பெண் ரூ.8 ஆயிரம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து, 20 ரூபாய் பத்திரத்தில் ‘‘ஜாயினிங் லீகல் அக்ரீமெண்ட்” என்ற பெயரில்அந்த பெண்ணிடம் கையெழுத்து வாங்கிவிட்டு, அவரது தனிப்பட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு, நீங்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறியுள்ளனர்.

பணியில் சேர்த்த அந்த பெண்ணை, அவரைப் போல வேலை தேடி வரும் நபர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 2 வாரம் வேலை பார்த்துவிட்டு சம்பளம் கேட்டபோது, எவ்வளவு பேரை நிறுவனத்தில் சேர்த்துவிடுகிறாயோ அதற்கு ஏற்றார் போல கமிஷன் கிடைக்கும். 3 மாதத்துக்கு பின்னர் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

இதனை நம்பி அந்த பெண்ணும் முகநூல் பக்கத்தில், ஆட்கள்தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். 30 பேர் ரூ.8 ஆயிரம் செலுத்திவேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

இதுகுறித்து நிறுவனத்தினரிடம் கேட்டபோது, “உங்களைப் பற்றி முகநூலில் தவறாக பதிவிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம்” என்று அவதூறாக பேசியதாக , பாதிக்கப்பட்டவர்கள், எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர்.

அவர் உத்தரவின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, போலி நிறுவனத்தைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம் வி.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (23),மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24,) திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டியன் சுதாகர் (23) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்