விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளை, கீழ்பவானி பாசனக் கால்வாயில் விசர்ஜனம் செய்ய அனுமதிக்கக் கூடாது, என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் வடிவேல், தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன், தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் ஈரோடு ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி கால்வாயில் 200 கி.மீ தூரத்துக்கு பாசனத்துக்காக நீர் செல்கிறது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில்வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை, கீழ்பவானி கால்வாயில்பல்வேறு இடங்களில் கரைக்கின்றனர்.
இதனால், கால்வாயில் தண்ணீர் ஓட்டம் பாதிக்கப்படும். அடைப்பு ஏற்படுவதால், தண்ணீர் பொங்கி கால்வாய் உடையும் ஆபத்து ஏற்படும். விநாயகர் சிலைகளில் பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ மதகுகளில் அடைப்பை ஏற்படுத்தி, நீர் வெளியேறுவதை தடுக்கிறது.
சிலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து, நாற்றங்காலில் முளைத்து வரும் இளம் நாற்றுகளை கருகச் செய்து பெரும் சேதத்தை உருவாக்கி விடும். எனவே, கீழ்பவானி கால்வாயின் எந்த பகுதியிலும், விநாயகர் சிலைகளைக் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக்கூடாது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago