தூய்மைப் பணியாளர் நியமனத்தில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் பணிநிலை, வாழ்க்கைத் தரம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
பெரம்பலூரில் ஆய்வு செய்ததில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய பிரச்சினை தவிர பெரிதாக குறைகள் இல்லை. அவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தவில்லை எனில், ஓரிரு மாதங்களில் அடுத்தக் கூட்டத்துக்கு நான் இங்கு வரும்போது, இதுதொடர்பாக விசாரித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பேன்.
தூய்மைக் காவலர்கள் பணியில் ஒப்பந்த முறையில் முறையான ஊதியம், வார விடுப்பு, 8 மணிநேர வேலை, இஎஸ்ஐ, வருங்கால வைப்புநிதி ஆகியவை வழங்கப்படுவதில்லை. இதனால், ஒப்பந்ததாரர் முறையை தமிழக அரசு கைவிட வேண்டும் அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததுபோல, ஒப்பந்தத் தொழிலாளர் முறையால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு செய்து, அறிக்கை பெற்று, வெளியிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு பிரச்சினை எனில், ஆணையத்தை அணுகலாம் என்றார். அப்போது, ஆட்சியர் ப. வெங்கடபிரியா, எஸ்.பி மணி ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago