தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் திடீரென மீன்கள் இறந்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சிவன்கோயில் அருகே தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வண்ண மீன்கள் விடப்பட்டன. இவை வளர்ந்து பெரிதாக காணப்படுகின்றன. தெப்பக்குளத்துக்கு வரும் மக்கள் அவ்வப்போது மீன்களுக்கு இரை போடுவர்.
தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் அவ்வப்போது இறந்து மிதப்பது வழக்கம். நேற்று தெப்பக்குளத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் இறந்து மிதந்தன. நேரம் செல்லச் செல்ல அவை அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். குளத்தில் வீசப்பட்ட ஏதேனும் உணவை தின்றதால் சிறிய மீன்கள் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago