திருப்பத்தூர் மாவட்டத்தில், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சியில்ரூ.77.06 லட்சம் மதிப்பில் சாலை சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
இத குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறுகையில், ‘‘திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜலகம்பாறை முதல் பெரிய வெங்காயப்பள்ளி வரை சுமார் 2.000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
இப்பணிகள் வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தர விடப்பட்டுள்ளது. இச்சாலைகள் நவீன தொழில்நுட்பத்துடன் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது, ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டெர்ராசைம் (TerraZyme) எனப்படும் திரவமானது மண்ணை உறுதி செய்யும் தன்மை கொண்டது. நேச்சுயர் பிளஸ் நிறுவனம் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட டெர்ராசைம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா முழுவதும் சுமார் 800 கி.மீட்டருக்கு மேல் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்படும் சாலைகள் 4 ஆண்டுகள் கடந்தும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.
நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி அமைக்கப்படும் இது போன்ற சாலைகள், தார்ச்சாலைகளுடன் ஒப்பிடும் போது செலவையும், சாலை அமைக்கும் பணி நேரத்தை வெகுவாக குறைக்கும்.
மேலும், இச்சாலை மிகவும் உறுதியானதாகவும், தரமானதாகவும் இருக்கும். ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 20 சதவீதம் வரை செலவை குறைக்கலாம். இச்சாலையானது, உள்ளூர் விவசாய உபகரணங்களான கலப்பை, ரொட்டோவேட்டர், தண்ணீர் தொட்டி, ரோடு ரோலர் போன்றவைகளை பயன்படுத்தி அமைக்கப்படுகிறது. அருகில் கிடைக்கக்கூடிய மண் வகைகளை பயன்படுத்தி இச்சாலைகள் அமைக்கப்படுவதால் மண்ணின் வலிமை வலுபெறும்.
மேலும், இச்சாலை அமைப்பதற்கு ஜல்லிக்கற்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படும். டெர்ராசைம் கட்டமைப்பானது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், எரிபொருட் களின் பயன்பாடும் குறைந்தளவு பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் இயற்கை வளமும் பாதுகாக்கப்படுகிறது. கரும்பு வெல்லப்பாகு மற்றும்பிற காய்கறி கழிவுகள் போன்ற மூலப் பொருட்களில் இருந்து டெர்ராசைம் தயார் செய்யப்படுகிறது. இதனால், டெர்ராசைம் இகோ பிரண்ட்லி என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த தொழில்நுட்பம் கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் செல்வகுமரன், உதவி பொறியாளர் சேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago