உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரும் கடந்த 4 ஆண்டுகளாக கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் உள்ளதால் நகராட்சிக்கு ரூ.38.70 கோடி நிலுவை தொகை உள்ளது.
இதனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றில் நகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்த வாடகை தொகையையும் செலுத்தும்படி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டதால் வியாபாரிகள் செய்வதறியாமல் திணறினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வாடகை செலுத்தாத 1587 கடைகளில் 1395 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
இதனால், மார்க்கெட்டில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மார்க்கெட்டில் உள்ள வாடகை செலுத்தப்படாத கடைகளுக்கு நகராட்சி ஊழியர்கள் ‘சீல்’ வைத்து, அதற்கான அறிவிப்பையும் ஒட்டியுள்ளனர்.
வாடகை பிரச்சினை காரணமாக வியாபாரிகள், மார்க்கெட்டில் உள்ள கடைகளை இரண்டாம் நாளாக நேற்றும் திறக்கவில்லை. இதனால், நேற்றும் மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் மார்க்கெட் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இப்பிரச்சினை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் முறையிட்டு வருகிறோம். பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால், மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் ஆதரவுடன் போராட்டத்தை விரிவுபடுத்தி, குடும்பத்தினருடன் போராட்டத்தை தொடருவோம் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago