நீலகிரி மலை ரயிலை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை உதகையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்மையில் மத்திய அரசு தேசத்தின் சொத்துக்களை விற்று பணமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவு எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரியமான நீலகிரி மலை ரயிலையும் தனியார்மயமாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள மோசமான இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதோடு, அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் உலக அளவில் புகழ் பெற்றதாகும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்காகவே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதிலிருந்தும் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். நீலகிரி மலை ரயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டில் உலகின் சிறந்த பாரம்பரியங்களுக்கு வழங்கப்படும் யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை தனியாருக்கு அளிப்பது எனும் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தனியார்மயப்படுத்தும் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தியும் நாளை (ஆக. 28) மாலை 4.30 மணிக்கு உதகை ரயில் நிலையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago