பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக - கூடலூர் நகரின் அடையாளமான மரங்களை வெட்ட எதிர்ப்பு :

By ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர் நகரின் அடையாளமாக கருதப்படும் 50 அடி உயரம் 20 அடி சுற்றளவுடன் கூடிய, நூற்றாண்டைக் கடந்த இரண்டு மரங்களை வெட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், வன வளம் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சோலை நகரமாக விளங்கி வருகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. கூடலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்துக்கு மூன்று மாநில பேருந்துகளும் வந்து செல்கின்றன. இடவசதி குறைவாக உள்ள இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக பேருந்து நிலையம் அருகில் உள்ள இரண்டு அல்பீசியா லெபெக் மரங்களை (Albizia lebbeck) அகற்ற அனுமதிக்கக்கோரி போக்குவரத்துக்கு கழகம் தரப்பில் வருவாய்த்துறையிடம் முறையிட்டுள்ளனர். மாவட்ட பசுமைக் குழுவிடம் அனுமதிபெற்ற பின்னரே இந்த மரங்களை வெட்ட வேண்டும் என வருவாய்த்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் இரட்டை மரங்களை வெட்ட நாம் தமிழர் கட்சி, இந்து முன்னணி மற்றும் உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மக்கள் கூறும்போது, ‘‘கூடலூருக்கே அடையாளமாக இந்த இரண்டு மரங்கள் உள்ளன. பேருந்து நிலையத்தில் உட்கார வசதியில்லாததால், சுமார் 50 அடி உயரம், 20 அடி சுற்றளவுள்ள இந்த மரங்களில் நிழலில் தான் பயணிகள் பேருந்துக்காக காத்திருப்பார்கள். ஏராளமான பறவைகள், அணில்களுக்கு அடைக்கலமாக இந்த மரங்கள் உள்ளன. மரங்களை வெட்டாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

கூடலூர் வருவாய்த்துறை அதிகாரிகள், ‘இரண்டு மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நாங்கள் வழங்க மறுத்துள்ளோம். இதனை மேற்பார்வை செய்ய மாவட்ட பசுமைக் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்’ என்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்