தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் திருப்பூர் கோட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கான குடியிருப்பு தொடர்பான மனுக்கள் பெறும் முகாம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது வாரமாக நேற்று நடைபெற்றது. குறைதீர் கூட்டரங்கின் வாயிலில் நடைபெற்ற முகாமில் திருப்பூர் மாநகர், பல்லடம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கினர்.
இதுதொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் வீரபாண்டியில் ஆயிரத்து 280 வீடுகள், நெருப்பெரிச்சலில் ஆயிரத்து 792 வீடுகள், உடுமலைப்பேட்டையில் 320 வீடுகள், அவிநாசியில் 447 வீடுகள் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 839 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, குடிபுகும் நிலையில் தயாராக உள்ளன. இந்த வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டி முடித்துள்ளது. இதில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும். பயனாளியின் பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து ஆயிரம் தொடங்கி, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தொகை நிர்ணயித்து, வீடுகள் பெறும் பயனாளிகளிடம் தொகை வசூலிக்கப்படும். யாருக்கும் இலவசம் இல்லை.
அதற்கு முன்னதாக, தகுதியுள்ள நபர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வருகிறோம். தற்போது பலரும் வீடு கோரி விண்ணப்பிக்கிறார்கள். இத்திட்டத்தில், அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் பொதுவான மனு அளிக்க கூறியுள்ளோம். எங்களை பொறுத்தவரை, ஆட்சியரின் உத்தரவைப் பொறுத்து வீடுகள் ஒதுக்கீடு பணி விரைவில் நிறைவடையும்" என்றனர்.
ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், அவர்களிடம் மட்டுமே மனுக்கள் பெறப்பட்டன. இதனால், மனு அளிக்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago