கேரளாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - நீலகிரி மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு : ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

By செய்திப்பிரிவு

உதகை நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பேபிஹால் மினி கிளினிக்கில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் 100 சதவீதம் நிறைவடையும் நிலையில் உள்ளன. உதகை, குன்னூர் நகராட்சி பகுதிகளில் மட்டும் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் ஏற்பட்டுள்ள கரோனா தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் எல்லையோரமாக இருப்பதால், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள், எல்லைகளிலுள்ள சோதனைச்சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளிகள் திறப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளை சுற்றிலும் தூய்மைப்படுத்துவது, சுத்தமான குடிநீர் வழங்குவது, வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துவது, இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

4200 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் 82 ஆசிரியர்கள் தவிர மீதமுள்ள 4,200 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் மட்டுமின்றி குழந்தைகளுடன் தொடர்பில் உள்ள ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உதகை சார் ஆட்சியர் மோனிகா ரானா, நகராட்சி ஆணையர் சரஸ்வதி, வட்டாட்சியர் தினேஷ், வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.ஸ்ரீதரன், மரு.முருகேசன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்