கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ முரளி மற்றும் போலீஸார் நேற்று காலை பாகலூர் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 11 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்த காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி அருகே மேல்வனபாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24), அவருக்கு உதவியாக வந்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், 11 டன் ரேஷன் அரிசியை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸார் தலை மறைவாக உள்ள வாகனத்தின் உரிமையாளர் சுந்தரராமன் (34) என்பவரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago