இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றங்கள் நடத்தப்பட்டு வருவது ஏன் என்பதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
ஆக.13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற கூட்டம் ஆக.11-ம் தேதியே முன்னறிவிப்பின்றி முடித்துவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், செல்போன்கள் ஒட்டுக்கேட்பு போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில், நாடாளுமன்றம் நடைபெறாமலேயே 25-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்துதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆக.23 முதல் ஆக.27 வரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்த மக்கள் நாடாளுமன்றத்தில் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. சபாநாயகர் கூட்டத்தை வழிநடத்துகிறார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வேளாண்மைத் துறை அமைச்சரின் தீர்மானம் முன்மொழியப்படுகிறது. அதன்மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று, தங்களின் கருத்துகளை எடுத்துக்கூறி வருகின்றனர் என்றார்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் முருகேசன், திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ரகுராமன், அனைந்திந்திய பெருமன்றம் காந்தி, கார்த்தி, கீர்த்தி, குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பங்கேற்றுப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், திமுக நகரச் செயலாளர் வீரா.கணேசன், மதிமுக மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago